குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானை
குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
பந்தலூர்,
பந்தலூர் அருகே சேரங்கோடு அரசு தேயிலை தோட்டம் (டேன்டீ), சின்ன யானை பள்ளம், பெரிய யானை பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் காட்டு யானைகள் புகுந்து குடியிருப்புகளை முற்றுகையிட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பெரிய யானை பள்ளம் பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்புகளை காட்டு யானை முற்றுகையிட்டது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். அவர்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த், வனகாப்பாளர் குணசேகரன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், யானை அங்கிருந்து செல்லவில்லை. இதையடுத்து வனத்துறையினர் தீப்பந்தங்களை காட்டி காட்டு யானையை விரட்டினர். இதேபோல் மழவன் சேரம்பாடி, கோட்டப்பாடி, செம்பக்கொல்லி, தட்டாம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன.