புற்களின் மீது வெண்ணிற போர்வைபோல் படர்ந்த உறைபனி

கொடைக்கானலில் கடும் குளிர் நிலவுவதால், புற்களின் மீது வெண்ணிற போர்வையை போர்த்தியதைப்போல் உறைபனி படர்ந்து காட்சி அளிக்கிறது.

Update: 2023-01-10 18:45 GMT

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் உறைபனி காலம் தொடங்கி பிப்ரவரி இறுதி வரை நீடிக்கும். அதன்படி இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடைசியில் இருந்து கடும் குளிர் நிலவி வருகிறது. அதனை தொடர்ந்து புத்தாண்டு பிறந்தது முதல் உறைபனியின் தாக்கம் நாளுக்கு, நாள் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு கொடைக்கானலில் வெப்பநிலை 8 டிகிரி செல்சியசாக இருந்தது. இதனையடுத்து நேற்று அதிகாலையில் 5 டிகிரி செல்சியசாக குறைந்ததால் கடும் குளிர் நிலவியது. இதன் காரணமாக பசுமை புற்களில் விழுந்த பனித்துளிகள் உறைபனியாக மாறி வெண்ணிற போர்வை போர்த்தியதைப்போல் ரம்மியமாக காட்சி அளித்தது. இதில் நீர்ப்பிடிப்பு பகுதியான கீழ்பூமி மற்றும் பாம்பார்புரம், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் பசுமையான புற்களின் மேல் உறைபனி படர்ந்து காணப்பட்டது. நட்சத்திர ஏரியில் சூரிய ஒளி பட்டதும் பனி ஆவியாகி செல்லும் காட்சியை பார்த்து சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்ந்தனர். பலர் தங்கள் செல்போன், கேமராக்களில் புகைப்படம் எடுத்தனர்.

சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மேற்பரப்பிலும் உறைபனி படிந்தது. அதில் பல வாகனங்களில் டீசல் உறைந்து போனதால் இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இந்த குளிரை சமாளிக்க பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பகல் நேரத்திலேயே குளிரை தாங்கும் ஆடைகளையே அணிந்து சென்றனர். மேலும் இந்த உறைபனி தாக்கத்தினால் விளைநிலங்களில் பயிரிட்ட காய்கறிகளும் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்