பொய்கையில் போகி பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தை
பொய்கையில் போகி பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தை கூடியது.
வேலூர் மாவட்டம் பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். கடந்த வாரம் நடந்த மாட்டுச்சந்தையில் ரூ.3 கோடிக்கு மேல் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஆண்டிற்கு ஒருமுறை போகி பண்டிகை அன்று வாரச்சந்தை கூடுவது வழக்கம். அதன்படி, நேற்று வாரச்சந்தை நடந்தது. இதில் குறைந்த அளவு மாடுகளே விற்பனைக்கு வந்ததால் வியாபாரிகள் ஆர்வமுடன் மாடுகளை வாங்க முன்வரவில்லை. மேலும் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆனால் மாட்டு பொங்கல் அன்று விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் கறவை மாடுகள், உழவு மாடுகள், காளை மாடுகளுக்கு வர்ணம் பூசி புதிய கயிறுகள் அணிவித்து கழுத்தில் மணி ஓசை கட்டி அழகு பார்த்து படையல் இடுவது வழக்கம். இதனால் நேற்று நடந்த சந்தையில் ரூ.10 லட்சத்திற்கு மேல் கயிறுகள், கழுத்தில் கட்டும் மணிகள், சங்குகள் உள்ளிட்டவைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு மேல் காய்கறி சந்தை கூடியது. இதில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் திரண்டனர். ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.100-க்கும், தக்காளி ரூ.40-க்கும், அவரை உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.