தொப்பம்பட்டியில் களைகட்டிய மாட்டுச்சந்தை

பழனி அருகே தொப்பம்பட்டி அங்காளம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இதில் ரூ.40 லட்சத்துக்கு மாடுகள் விற்பனையானது.

Update: 2023-08-03 20:00 GMT

கோவில் திருவிழா

பழனி அருகே தொப்பம்பட்டியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் மாட்டுத்தாவணி எனப்படும் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு மாட்டுச்சந்தை கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி பழனி, ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், பொள்ளாச்சி, உடுமலை, தொப்பம்பட்டி, கிணத்துக்கடவு, பல்லடம், குண்டடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் மாடுகள், காளைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

மேலும் ரேக்ளா பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு பயன்படுத்தப்படும் காளைகள், கறவை பசுக்கள், உழவுமாடுகள் ஆகியவையும் கொண்டு வரப்பட்டு இருந்தது.

மாட்டு சந்தை

குறிப்பாக காங்கயம், புலிக்குளம், லம்பாடி உள்ளிட்ட நாட்டின மாடுகள், காளைகள், கன்றுகள் அதிகமாக விற்பனைக்கு வந்திருந்தன. இவற்றை தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

நேற்று ஆடிப்பெருக்கு என்பதால், காலை முதலே ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் வந்திருந்தன. ஆடிப்பெருக்கு அன்று மாடு வாங்கினால் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். இதனால் பலரும் போட்டி போட்டு மாடு, கன்றுகளை வாங்கி சென்றனர்.

குறிப்பாக காங்கயம் கன்றுகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விலை போனது. அதேபோல் காங்கயம் பசுக்கள் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் காளை ஜோடி ரூ.1 முதல் 1½ லட்சம் வரை விலை போனது. மேலும் சந்தை பகுதியில் மாட்டுக்கு தேவையான கழுத்துக்கயிறு, மணிகள், சாட்டை, விவசாய கதிர் அரிவாள், சோள தட்டை வெட்டு கருவி உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதை விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

களைகட்டும் விற்பனை

சந்தை விற்பனை குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறும்போது, கொரோனா பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சந்தை நடைபெறவில்லை. கடந்த ஆண்டு சந்தையில் குறைவான மாடுகள் வந்திருந்தன. ஆனால் இந்த ஆண்டு சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. இதுவரை ரூ.40 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை ஆனது. சந்தை இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடப்பதால் மாடுகள் வருகை அதிகரிப்பதோடு விற்பனையும் களைகட்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்