இலவச மின் இணைப்பு வழங்க கோரி விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

இலவச மின் இணைப்பு வழங்க கோரி விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-24 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் முன்பு விவசாய இலவச மின் இணைப்பு கேட்டு காத்திருப்பவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகி வேல்மாறன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்டக்குழு நிர்வாகி என்.எஸ்.ராஜா, தாண்டவராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டாச்சிபுரத்தில் புதிதாக செயற்பொறியாளர் அலுவலகம் அமைக்கவேண்டும், 2003-ம் ஆண்டு முதல் இலவச மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் மின்வாரிய அதிகாரி சைமன் சார்லஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், உங்களது கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை ஏற்ற விவசாயிகள் கலைந்து சென்றனர். விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்