உறவினரை பதிவு திருமணம் செய்த நிலையில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

உறவினரை பதிவு திருமணம் செய்த நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் கல்லூரி மாணவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வைரலாகும் இந்த வீடியோவில், காதலரின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2023-02-17 22:53 GMT

அன்னதானப்பட்டி:

கடத்தல் புகார்

சேலம் சீலநாயக்கன்பட்டி வேலு நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி கனிஷ்கா (வயது 22). இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந் தேதி திருச்சி உறையூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் நடந்தது.

இந்தநிலையில், கடந்த 7-ந் தேதி தாதகாப்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து கனிஷ்கா தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை சிலர் காரில் கடத்தி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

கனிஷ்காவை சீலநாயக்கன்பட்டி காஞ்சிநகரை சேர்ந்த அஜித்குமார் (25), இவருடைய தந்தை மாது என்கிற மாதேஷ் (52), தாயார் தேவி (48) ஆகிய 3 பேரும் சேர்ந்து கடத்தி சென்று விட்டதாக மணிகண்டன் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கனிஷ்கா கடத்தப்பட்டதாக வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக அஜித்குமாரிடம் விசாரணை நடத்தியதில், தான் கனிஷ்காவை கடத்தவில்லை எனவும், அவருடன் தொடர்பு இல்லை எனவும் கூறினார். இதையடுத்து கனிஷ்காவை போலீசார் தேடி வந்தனர்.

வீடியோ வெளியிட்ட மாணவி

இந்த நிலையில் கனிஷ்கா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் திருச்சி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறேன். கடந்த 7 ஆண்டுகளாக அஜித் குமார் என்பவரை காதலித்து வருகிறேன். எங்கள் காதல் விவகாரம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எனது வீட்டுக்கு தெரிந்து விட்டது. நான் கல்லூரி வகுப்பில் இருந்த போது, எனது உறவினர் இறந்து விட்டதாக கூறி என்னை அங்கிருந்து கூட்டிச்சென்றனர். தொடர்ந்து உறவினர் மணிகண்டன் என்பவருடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந் தேதி பதிவு திருமணம் செய்து வைத்தனர்.

தற்போது சென்னையில் உள்ள ஒரு விடுதியில் பாதுகாப்பாக தங்கி உள்ளேன். இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளேன்.

இது தொடர்பாக எனது பெற்றோரை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் இனி மேல் தொந்தரவு செய்ய மாட்டோம் என எழுதி கொடுத்து விட்டு சென்று விட்டனர். ஆனால் சேலம் சென்றால் எனக்கும், எனது காதலன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஏதாவது நடந்து விடுமோ என்று பயமாக உள்ளது.

இது குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆகியோர் விசாரித்து எங்களுக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் வீடியோவில் பேசியுள்ளார்.

இது வீடியோ பதிவு முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்