பெரம்பலூர் மாவட்டம், எசனை அருகே கீழக்கரை அமராவதி தெருவை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் ரகுநாத் (வயது 18). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. செந்திலின் மனைவி தனது தோட்டத்தின் அருகே உள்ள கிணற்றுக்கு துணி துவைக்க போவது வழக்கம். இதனால் நேற்று மாலை ரகுநாத் தனது தாய் துணி துவைக்க அந்த கிணற்றுக்கு சென்றிருக்கலாம் என்று எண்ணி அங்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக ரகுநாத் காணாததால் அவரை தேடி அந்த கிணற்றுக்கு அவரது குடும்பத்தினர், உறவினர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது கிணற்றின் அருகே ரகுநாத்தின் காலணி மட்டும் கிடந்துள்ளது. இதனால் ரகுநாத் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம்? என்று சந்தேகமடைந்த அவர்கள் இதுகுறித்து உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி ரகுநாத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது கிணற்றில் தண்ணீரில் மூழ்கி இறந்த ரகுநாத்தின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதையடுத்து பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரகுநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.