செங்கல் பாரம் ஏற்றி வந்த லாரி சிக்கியது
போட்டு பத்து நாளான புட்டுவிக்கி சாலை புதைகுழியாக மாறியதால் அந்த சாலையில் செங்கல் பாரம் ஏற்றி வந்த லாரி சிக்கிக்கொண்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை
போட்டு பத்து நாளான புட்டுவிக்கி சாலை புதைகுழியாக மாறியதால் அந்த சாலையில் செங்கல் பாரம் ஏற்றி வந்த லாரி சிக்கிக்கொண்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லாரி சிக்கியது
கோவையில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. இதில் செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கோவை புட்டுவிக்கி ரோட்டில் சிறிய பாலம் அருகே சென்றபோது, லாரியின் முன்பக்க சக்கரங்கள் திடீரென புதிதாக போடப்பட்ட சாலைக்குள் புதைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர், அந்த லாரியில் இருந்து குதித்து உயிர்தப்பினார். இதற்கிடையே சரக்கு லாரியின் பின்பக்க சக்கரங்களும் திடீரென பூமிக்குள் புதைய தொடங்கியது. இதனால் அந்த வழியாக வேறு வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக சம்பவஇடத்துக்கு வந்தனர். அங்கு இருந்த பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆனாலும் சரக்கு லாரியை நிலைக்கு கொண்டு வர இயலவில்லை.
கிரேன் மூலம் மீட்பு
இதைத்தொடர்ந்து ராட்சத கிரேன் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் நடுரோட்டில் புதைந்து கிடந்த சரக்கு லாரியை பத்திரமாக மீட்டு, போக்குவரத்தை சீர்படுத்தினர்.
புட்டுவிக்கி சாலையில் பில்லூர் 3-ம் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை குழாய்கள் ஆகியவற்றுக்காக சாலைகள் முழுவதும் தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்பட்ட பின்னர் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் புதிய சாலை அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
புதிதாக போட்டு பத்து நாளுதான் ஆச்சு....புட்டுவிக்கி சாலை புதைகுழியாக மாறியாச்சு, லாரி செல்லும் அளவுற்கு கூட தரமின்றி சாலை அமைக்கப்பட்டு உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "கோவை மாநகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் ரோடுகள் குண்டும்-குழியுமாக காட்சி அளிக்கின்றன.
இதனால் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் ரோட்டிலுள்ள குழிகளில் சிக்கி கவிழும் நிலை வாடிக்கையாக உள்ளது. கோவை மாநகர போக்குவரத்து சாலைகளில் பெரும்பாலானவை தர மற்றதாக உள்ளது. எனவே தான் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை விடுத்து உள்ளனர்.