நாகை புதிய பஸ் நிலையம் அருகே மரம் வேரோடு சாய்ந்தது
விடிய விடிய பெய்த மழையால் நாகை புதிய பஸ் நிலையம் அருகே மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.
விடிய விடிய பெய்த மழையால் நாகை புதிய பஸ் நிலையம் அருகே மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.
விடிய,விடிய பெய்த மழை
நாகையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அவ்வப்போது வானம் மேக மூட்டத்துடன் தென்பட்டாலும் மழை பெய்வதற்கான எந்தஒரு அறிகுறியும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நாகையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் வெளுத்து வாங்கியது. அதைத்தொடர்ந்து விடிய விடிய, மழை விட்டு விட்டு பெய்தது.
இதனால் நாகை மாவட்டத்தில் குறுவை நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடைமடையில் பெய்த கனமழை தங்களுக்கு கை கொடுத்துள்ளதாகவும் அதன் காரணமாக, முளைப்புத்திறன் அதிகரித்து குறுவைக்கு புரத சத்தை ஏற்படுத்தி தந்துள்ளதாகவும் நாகை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வேரோடு விழுந்த மரம்
இந்த திடீர் மழையால் நாகை புதிய பஸ் நிலையம் அருகே அவுரி திடலில் உள்ள மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. அதேபோல நாகை நகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பத்தில் விழுந்தன.
இதனை கடும் சிரமத்துடன் மின்வாரிய ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். நாகையில் விடிய விடிய பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.