மலைப்பாதையில் மரம் விழுந்தது
பெரியூர் அருகே மலைப்பாதையில் மரம் விழுந்தது.
பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, பெரியூர் ஆகிய மலைக்கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பெரும்பாறை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு பெரியூர் அருகே 2 மரங்கள் வேரோடு சாய்ந்து மலைப்பாதையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலைத் துறையினரும், பொதுமக்களும் இணைந்து மரத்தை வெட்டி அகற்றினர். மரங்கள் விழுந்ததால் கே.சி.பட்டி மலைப்பாதையில் சுமார் 15 மணி நேரத்துக்கு பின் போக்குவரத்து தொடங்கியது. இதேபோல் பாச்சலூர் பகுதியில் கனமழைக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் உயிரிழப்பு சம்பவம் ஏதும் ஏற்படவில்லை.