ஆற்றின் குறுக்கே விழுந்த மரத்தை பாலமாக பயன்படுத்தும் கிராம மக்கள்
வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியதால் ஆற்றின் குறுக்கே விழுந்த மரத்தை கிராம மக்கள் பாலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
வால்பாறை
வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியதால் ஆற்றின் குறுக்கே விழுந்த மரத்தை கிராம மக்கள் பாலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
சோலையாறு அணை
வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து. இந்த நிலையில் நேற்று காலை முதல் வால்பாறையில் குறைந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
ஆனாலும் ஆற்றில் வெள்ளம் குறையாததால் சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் 9-வது நாளாக சோலையாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உள்ளது. தொடர்ந்து கேரளாவிற்க உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6,590 கனஅடி வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து மின்நிலையம்-1 இயக்கப்பட்டும், சேடல்பாதை வழியாகவும் பரம்பிக்குளம் அணைக்கு 3,561 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல மின்நிலையம்-2 இயக்கப்பட்டும், மதகுகள் வழியாகவும் 2,865 கனஅடி தண்ணீர் கேரளாவிற்கு வெளியேற்றப்படுகிறது.
தரைப்பாலம் மூழ்கியது
கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக தற்போது எஸ்டேட் பகுதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வரட்டுப்பாறை எஸ்டேட் பகுதியில் இருந்து அணலி எஸ்டேட் பகுதிக்கு செல்லும் சாலையின் குறுக்கே உள்ள ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி வெள்ளம் செல்கிறது.
இதனால் அணலி எஸ்டேட் பகுதியில் உள்ள தொழிலாளர்கள், கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வால்பாறைக்கு செல்ல ஆற்றை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் மழையின் காரணமாக ராட்சத மரம் ஒன்று ஆற்றின் குறுக்கே விழுந்தது. தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால், ஆற்றின் குறுக்கே விழுந்த மரத்தை பொதுமக்கள் பாலமாக பயன்படுத்தி வருகின்றனர். எஸ்டேட் பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள் ஆற்றின் குறுக்கே கிடக்கும் மரத்தின் மீது நடந்து சென்று, ஆற்றை கடந்து வால்பாறைக்கு சென்று வருகின்றனர்.