தூத்துக்குடியில் டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
தூத்துக்குடியில் டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில்-பாளையங்கோட்டை ரோட்டில் ஏ.வி.எம். மருத்துவமனை அருகில் அரசு ஊழியர் சங்கம் முன்பாக உள்ள டிரான்ஸ்பார்மரில் இன்று காலை திடீரென தீப்பொறி கிளம்பியது. சில நொடிகளில் அது பெரும் தீயாக மாறி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இந்த தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறை மற்றும் மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மின்வாரிய அலுவலர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 20 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர்.
தீவிபத்து நிகழ்ந்த பகுதி அருகே மார்க்கெட், மருத்துவமனை, வணிக வளாகங்கள் உள்ளன. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தூத்துக்குடி நகரின் பிரதான சாலையில் நிகழ்ந்துள்ள இந்த தீவிபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.