திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் கார் மீது மோதி பாலத்தில் கவிழ்ந்த சுற்றுலா பஸ்; 18 பேர் காயம்

திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் கார் மீது மோதி பாலத்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்தது. இதில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 18 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-05-25 18:49 GMT

சுற்றுலா பஸ்

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 41 பேர் தமிழ்நாட்டிற்கு பஸ் மூலம் சுற்றுலா வந்துள்ளனர். இந்த பஸ்சை ரமேஷ் (வயது 51) என்பவர் ஓட்டி சென்றார். ஆந்திர மாநில சுற்றுலா பயணிகள் நாகர்கோவிலில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு சென்னையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர்.

இதற்காக அவர்கள் பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் சிறுவாச்சூர் சர்வீஸ் ரோடு அருகே நேற்று அதிகாலை பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர்.

18 பேர் காயம்

சிறுவாச்சூர் பாலத்தின் அருகே சர்வீஸ் ரோட்டில் கீழே இறங்கும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற பஸ் அந்த வழியாக சென்ற கார் மீது மோதி பாலத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் டிரைவர் சென்னையை சேர்ந்த கிறிஸ்டோபர் (53), காரில் பயணம் செய்த பிரின்ஸ் (48), சியாந்த் (17), பஸ் டிரைவர் ரமேஷ், கண்டக்டர் சாய் (31), பஸ்சில் பயணம் செய்த பயணிகள் உள்பட 15 பேர் லேசான காயமும், 3 பேர் படுகாயமும் அடைந்தனர். இவர்களில் 5 பேர் பெண்கள் ஆவர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து, காயம் அடைந்த 18 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதில் படுகாயம் அடைந்த 3 பேர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்