பொதுமக்கள் கூட்டத்துக்குள் புகுந்த டிப்பர் லாரி
செம்பட்டியில் பொதுமக்கள் கூட்டத்தில் புகுந்து லாரி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள பிரவான்பட்டி பகுதியில் இருந்து செம்மண் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. செம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி தாறுமாறாக ஓடி, சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்தபடி அங்கிருந்து ஓடி உயிர் தப்பினர். இருப்பினும் அந்த பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்களுடன் நின்றுகொண்டிருந்த திண்டுக்ககல் அடியனூத்து பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 32), செம்பட்டியை சேர்ந்த அற்புதம் (50) ஆகியோர் லாரி மோதியதில் படுகாயமடைந்தனர். மேலும் அவர்களின் மோட்டார் சைக்கிள்களும் லாரியின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி சேதமடைந்தன. படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்ததும் டிப்பர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான டிப்பர் லாரி டிரைவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.