முட்கள் குத்தியதால் உடலில் காயம்ஏற்பட்டு புலி செத்தது.

உடுமலை அமராவதி வனப்பகுதியில் முள்ளம் பன்றியை வேட்டையாடிய போது முட்கள் குத்தியதால் உடலில் காயம்ஏற்பட்டு புலி செத்தது.

Update: 2023-10-24 13:47 GMT

தளி

உடுமலை அமராவதி வனப்பகுதியில் முள்ளம் பன்றியை வேட்டையாடிய போது முட்கள் குத்தியதால் உடலில் காயம்ஏற்பட்டு புலி செத்தது.

இறந்து கிடந்த புலி

திருப்பூர் வனக்கோட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் தாவரங்கள் உள்ளன. வனம் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வனத்துறையினர் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கமாகும்.

அந்த வகையில் நேற்று முன்தினம் அமராவதி வனச்சரகம் அமராவதிபிரிவு, கல்லாபுரம் சுற்று கழுதை கட்டி ஓடைப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அங்கு ஆண் புலி இறந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியன் தலைமையில் துணை இயக்குனர் மற்றும் மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா, உதவி இயக்குனர் கணேஷ்ராம், அமராவதி வனச்சரக அலுவலர் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த புலியை பார்வையிட்டனர். அப்போது புலியின் முன்கால்கள் மற்றும் மார்பு பகுதியில் காயம் இருந்தது.

இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், ராஜன், ராஜா சொக்கப்பன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி இறந்து கிடந்த புலியின் உடலை மருத்துவ பரிசோதனை செய்தனர். அதன்பின்னர் புலியின் உடல் வனப்பகுதியில் எரியூட்டப்பட்டது.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

முள்ளம் பன்றியின் முட்கள்

இறந்து கிடந்த ஆண் புலிக்கு 9 வயது இருக்கலாம். வனப்பகுதியில் முள்ளம் பன்றியை வேட்டையாடும் போது முள்ளம் பன்றியின் முட்களால் அதன் முன் கால்கள் மற்றும் மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீக்கம் ஏற்பட்டு உள்பகுதியில் சீழ் பிடித்த நிலையில் வேட்டையாட முடியாமல் அதன் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவக் குழுவினரால் உறுதி செய்யப்பட்டது.

மேலும் முள்ளம் பன்றியின் முட்கள் புலியின் கால் மற்றும் இரைப்பை பகுதியில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.



--

Tags:    

மேலும் செய்திகள்