கடலில் குதித்து ஜவுளி வியாபாரி தற்கொலை

கீழக்கரையில் கொடுத்த பணத்தை திரும்ப பெறமுடியாமல் கடலில் குதித்து ஜவுளி வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-02 18:45 GMT

கீழக்கரை, 

ஜவுளி வியாபாரி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அலைவாய்கரைவாடியை சேர்ந்தவர் சிவமுனி(வயது 38). இவர் கீழக்கரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். சிவமுனி பலருக்கும் பண உதவி செய்து வந்தாராம். ஆனால் அவ்வாறு அவர் ெகாடுத்த பணத்தை சிலர் திருப்பி கொடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தான் கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாமல் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பகல் ஒரு மணி அளவில் வீட்டில் சாப்பிட்டுவிட்டு தனது மோட்டார்சைக்கிளில் கீழக்கரை கடற்கரைக்கு சிவமுனி சென்றார். அங்குள்ள ஜெட்டி பாலத்தில் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு கையில் இருந்த பணம் மற்றும் செல்போனை மோட்டார்சைக்கிளில் வைத்து விட்டு கடலை நோக்கி சென்றார்.

தற்கொலை

பின்னர் திடீரென கடலில் குதித்து சிவமுனி தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். மேலும் இதுகுறித்து கடற்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், காவல் முதல் நிலை உதவியாளர் அய்யனார் மற்றும் போலீசார் அங்கு வந்து சிவமுனியை தேடி பார்த்தனர். ஆனால் சிறிது நேரம் கழித்து அவரது உடல் கரை ஒதுங்கியது.

பின்னர் சிவமுனியின் உடலை கைப்பற்றி கீழக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்