தூத்துக்குடிக்கு சிறுத்தை தோலை கடத்தி வந்து பதுக்கிய அறநிலையத்துறை தற்காலிக ஊழியர் கைது

தூத்துக்குடிக்கு சிறுத்தை தோலை கடத்தி வந்து பதுக்கிய அறநிலையத்துறை தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-19 18:45 GMT

தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட சிறுத்தை தோல் சிக்கியது. இதுதொடர்பாக இந்து அறநிலையத்துறை தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டார்.

கண்காணிப்பு

தூத்துக்குடி பகுதியில் சிறுத்தை தோலை சிலர் விற்பனை செய்வதற்காக வைத்து இருப்பதாக சென்னை வனஉயிரின குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் உத்தரவின் பேரில், வனச்சரகர் சுப்பிரமணியன், வனவர்கள் மகேஷ், கண்ணன், வனகாப்பாளர் பாலகிருஷ்ணன், லட்சுமணன் மற்றும் வன அலுவலர்கள் தூத்துக்குடி பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அறநிலையத்துறை ஊழியர்

அப்போது தூத்துக்குடி அமெரிக்கன் ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் சந்தேகப்படும்படியாக கையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர் தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்த சூரியநாராயணன் (வயது 42) என்பதும், இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் தற்காலிக உதவியாளராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

சிறுத்தை தோல்

தொடர்ந்து வனத்துறையினர், சூரியநாராயணன் கையில் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் நன்கு பதப்படுத்தப்பட்ட சிறுத்தையின் தோல் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த தோல் சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுத்தையை வேட்டையாடி கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கைது

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் உடனடியாக அவரை கைது செய்து, சிறுத்தை தோலை பறிமுதல் செய்தனர். சிறுத்தை தோலை நண்பர் ஒருவரிடம் இருந்து வாங்கி வைத்து இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வனத்துறையினர் சூரியநாராயணனை, தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கனிமொழி முன்னிலையில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தை தோல் நோய்வாய்ப்பட்டு இறந்த சிறுத்தையின் உடலில் இருந்து எடுக்கப்பட்டதா? அல்லது வேட்டையாடி எடுக்கப்பட்டு உள்ளதா?, எந்த பகுதியில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டு உள்ளது என்று வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு

தூத்துக்குடியில் முதல் முறையாக சிறுத்தை தோல் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்