பற்களை பிடுங்கிய விவகாரம்: ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா விசாரணையை தொடங்கினார்

அம்பையில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நேற்று தனது விசாரணையை தொடங்கினார்.

Update: 2023-04-09 20:52 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்தவர் பல்வீர்சிங். இவர் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி பகுதி போலீஸ் அதிகாரிகள் சிலர் காத்திருப்போர் பட்டியலுக்கும், ஆயுதப்படைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவுப்படி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை மேற்கொண்டார். அவர், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா

இந்த நிலையில் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை தமிழக அரசு நியமித்தது.

இதையடுத்து அவர் நேற்று பிற்பகலில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்தார். அவரை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வரவேற்றார். தொடர்ந்து கலெக்டரிடம் சம்பவம் குறித்து அவர் கேட்டறிந்தார்.

விசாரணையை தொடங்கினார்

பின்னர் நேற்று மாலையில் அதிகாரி அமுதா, தனது விசாரணையை தொடங்கினார். அப்போது சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் தனது விசாரணை தொடர்பாக நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வாக்குமூலம் அளித்தவர்கள், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உடன் தனிப்படையில் பணியாற்றியவர்களிடம் அதிகாரி அமுதா விசாரிக்க உள்ளார். மேலும் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகள், காத்திருப்போர் பட்டியலில் உள்ள போலீசார் என அனைத்து தரப்பினரிடமும் விரிவான விசாரணை நடத்த உள்ளார். இந்த விசாரணை அறிக்கையை 1 மாதத்துக்குள் அவர் தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.

அம்பையில் இன்று விசாரணை

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

விசாரணை அதிகாரி அமுதா இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பை தாலுகா அலுவலகத்தில் தமது விசாரணையை மேற்கொள்கிறார். எனவே விசாரணை கைதிகளை துன்புறுத்தியது தொடர்பாக நேரில் புகார் அளிக்க விரும்புவோர், அதுதொடர்பான ஆவணங்கள், தகவல்கள் அல்லது வாக்குமூலம் அளிக்க விரும்புவோர் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகலாம். ஏற்கனவே சேரன்மாதேவி உதவி கலெக்டரிடம் வாக்குமூலம் அளித்தவர்கள், மீண்டும் விசாரணை அதிகாரி முன்னிலையில் விளக்கம் அளிக்கலாம்.

மேலும் நேரடியாக தகவல் அளிக்க முடியாதவர்கள் ambai.inquiry@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 8248887233 என்ற தொலைபேசி எண்ணிலோ குறிப்பிட்ட நேரத்தில் பேசியோ அல்லது வாட்ஸ்-அப் மூலமாகவோ விளக்கம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்