தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலி
குடியாத்தத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலியானார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த மேலாளத்தூர் கூடநகரம் பகுதியைச் சேர்ந்தவர் பாரூக் பாஷா. இவரது மகன் முகமது இர்ப்பான் (வயது 20). இவர் குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மேலாளத்தூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். இந்த நேரத்தில் அந்த வழியாக வந்த ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.
அவரை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சென்று அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.