3 பேரை கத்தியால் கிழித்த வாலிபர் கைது
முன்விரோத தகராறில் 3 பேரை கத்தியால் கிழித்த வாலிபர் கைது
விழுப்புரம்
புதுச்சேரி மாநிலம் கரையாம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 29). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கரையாம்புத்தூர் மோகன் என்பவரின் மகள் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்றபோது அங்கு வந்த விழுப்புரம் அருகே கலிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த விஜி என்கிற அய்யனாருடன் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த சூழலில் சீனிவாசனுக்கு சொந்தமான டிப்பர் லாரியில் அஜித், அலி ஆகிய இருவரும் கிராவல் ஏற்றிக்கொண்டு கலிஞ்சிக்குப்பம் வந்தனர். அப்போது விஜி, அவரது சகோதரர் இளங்கோ(30) ஆகிய இருவரும் முன்விரோதம் காரணமாக லாரியை வழிமறித்து பிரச்சினை செய்தனர். இதை அறிந்த சீனிவாசன் அவரது நண்பர்களான அதே கிராமத்தை சேர்ந்த கோதண்டம்(39), பிரபு(26) ஆகியோருடன் சென்று தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த விஜி, இளங்கோ ஆகிய இருவரும் சீனிவாசன் உள்ளிட்ட 3 பேரையும் திட்டி கத்தியால் கிழித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் விஜி, இளங்கோ ஆகியோர் மீது வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோவை கைது செய்தனர்.