ஆசிரியையின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய வாலிபர் கைது

இன்ஸ்டாகிராமில் ஆசிரியையின் பெயரில் போலியான ஐ.டி. தொடங்கி அவரின் புகைப்படத்தை திருடி ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-25 17:40 GMT

திருவண்ணாமலை

இன்ஸ்டாகிராமில் ஆசிரியையின் பெயரில் போலியான ஐ.டி. தொடங்கி அவரின் புகைப்படத்தை திருடி ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆபாசமாக சித்தரித்து...

வந்தவாசி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 27 வயதுடைய ஆசிரியை பணியாற்றி வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் ஐ.டி.க்கு, அவரது பெயர் கொண்ட மற்றொரு ஐ.டி. மூலம் மர்மநபர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குறுந்தகவல் அனுப்பினார். தொடர்ந்து நாளடைவில் அந்த ஆசிரியைக்கு ஆபாசமான குறுந்தகவல்கள் அனுப்ப தொடங்கினார்.

மேலும் அவரது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஐ.டி.யில் இருந்து எடுத்து அதை ஆபாசமாக சித்தரித்து (மார்பிங்) அந்தப் பெண்ணுக்கே அனுப்பினார். மேலும் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்ட படங்களை அனுப்பி மிரட்டல் விடுத்து வந்தார்.

பட்டதாரி வாலிபர் கைது

இதுதொடர்பாக அந்த ஆசிரியை திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி அறிவுரையின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இன்ஸ்டாகிராம் ஐ.டி.யை வைத்து விசாரணை செய்ததில், வந்தவாசி, சேத்துப்பட்டு சாலை பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 25) என்பவர் ஆசிரியைக்கு ஆபாச படங்கள் அனுப்பியது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

சந்தோஷ்குமார் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார். ஆசிரியையை பணத் தேவைக்காக மிரட்டினாரா? அல்லது தனது ஆசைக்கு இணங்க வைக்க இவ்வாறு செய்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பெண்கள் தங்களது புகைப்படங்களை வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடவோ, பகிரவோ வேண்டாம். தங்களுக்கு யாராவது தவறான குறுந்தகவல் அனுப்பி மிரட்டல் விடுத்தால் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கலாம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்