குப்பை பொறுக்குவது போல் நடித்து திருடிய வாலிபர்

குப்பை பொறுக்குவது போல் நடித்து திருடிய வாலிபர்

Update: 2022-11-21 19:54 GMT

தஞ்சையில், பூட்டிய வீட்டில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். பகலில் குப்பை பொறுக்குவது போல் நடித்து திருட்டில் ஈடுபட்டவரை, கண்காணிப்பு கேமரா உதவியுடன் போலீசார் மடக்கினர்.

பூட்டிய வீட்டில் திருட்டு

தஞ்சை வங்கி ஊழியர் காலனியில் கடந்த 9-ந் தேதி பகலில் 3 வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டது. இதில் ஒரு வீட்டில் மட்டும் 19½ பவுன் நகை மற்றும் பணம் திருட்டு போனது. மற்ற 2 வீடுகளில் எதுவும் திருடு போகவில்லை. இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

புகாரின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) செந்தில்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், போலீஸ்காரர்கள் புவனேஷ், சிவக்குமார், ராஜதுரை, ரஞ்சித்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

கண்காணிப்பு கேமரா

இந்த தனிப்படையினர் திருட்டு நடந்த வீடுகளின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 15-க்கும் மேற்பட்ட கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அதில் ஒரு கேமராவில் குப்பை பொறுக்குவது போல் ஒரு வாலிபர் சாக்குப்பையுடன் வந்தார். அவரின் நடவடிக்கை சந்தேகப்படும்படியாக இருந்தது.

இதையடுத்து தனிப்படையினர் அந்த பதிவுகளை கொண்டு தீவிரமாக தேடினர். இதில் அந்த வாலிபர் சென்னை எண்ணூரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சின்ன சிவா என்ற சிவா(வயது23) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னை சென்று சிவாவை மடக்கிப்பிடித்தனர். மேலும் சிவாவிடம் இருந்து திருட்டு போன நகைகளின் ஒரு பகுதியை மீட்டனர். தொடர்ந்து மீதி நகைகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

குப்பை பொறுக்குவது போல....

விசாரணையில் கைது செய்யப்பட்ட சிவா சென்னையில் இருந்து ரெயில் மூலம் தஞ்சை வந்துள்ளார். தஞ்சை கீழவாசல் பகுதிக்கு சென்று அங்கு ஒரு பிளாஸ்டிக் சாக்குப்பையை வாங்கியுள்ளார். பின்னர் தான் அணிந்திருந்த ஆடைகளை களைந்து அதனுள் வைத்து விட்டு கிழிந்த ஆடைகளை அணிந்துள்ளார்.

பின்னர் வங்கி ஊழியர் காலனி பகுதிக்கு சென்று குப்பை பொறுக்குவது போல நடித்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டுள்ளார். அதன்படி பூட்டிய வீடுகளின் சுற்றுச்சுவர் ஏறி உள்ளே குதித்து பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று திருடி உள்ளார். யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக குப்பை பொறுக்குவது போல நடித்து திருடி உள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்