ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாகர்கோவில்:
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி இசச்கி மற்றும் போலீசார் சம்பவத்தன்று மேக்கோடு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மீன் ஏற்றிச் செல்லும் கூண்டு அமைக்கப்பட்ட டெம்போ ஒன்று வேகமாக வந்தது. போலீசாரை கண்டதும் டெம்போவை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடினார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் டெம்போவை சோதனை செய்த போது அதில் சிறு, சிறு மூடைகளில் 6 டன் ரேஷன் அரிசி இருந்தது. இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதனைதொடர்ந்து தப்பி ஓடிய டிரைவரை குறித்து விசாரணை நடத்தினர்.
குண்டர் சட்டத்தில் கைது
விசாரணையில் அவர் களியக்காவிளை ஆர்.சி. தெருவை சேர்ந்த அருள் ஜோசப் ஸ்டாலின் (வயது 35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் அரிசி கடத்தல் வழக்கு உள்ளது.
போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதருக்கு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பரிந்துரை செய்தனர். இதையடுத்து கலெக்டரின் உத்தரவுபடி அருள் ஜோசப் ஸ்டாலினை நேற்று போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.