மாமனாரை துப்பாக்கியால் சுட்ட வாலிபர்

காரைக்குடி அருகே மாமனாரை துப்பாக்கியால் சுட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-09-20 18:45 GMT

காரைக்குடி,

காரைக்குடி அருகே மாமனாரை துப்பாக்கியால் சுட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

குடும்ப தகராறு

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியை அடுத்த கோவிலூரை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 56). கொத்தனார். இவருடைய மூத்த மகள் ராக்கம்மாள். இவரை அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராமச்சந்திரனுக்கு (32) திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. எனவே நாகப்பன் அவர்களை சமாதானப்படுத்தி வந்துள்ளார்.

துப்பாக்கியால் சுட்டார்

நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்டது. தகவல் அறிந்து மகள் வீட்டுக்கு வந்த நாகப்பன், அவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றார். அப்போது ராமச்சந்திரன், நாகப்பனை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார். இதையடுத்து நாகப்பன் குடும்பத்தினர், ராமச்சந்திரனை வீட்டின் உள்ளே தள்ளி கதவை பூட்டினர். ராமச்சந்திரன் ஆத்திரம் அடைந்து, வீட்டில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்துவிட்டு, கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்தார். நாகப்பனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

காயம்

அந்த துப்பாக்கியில் பறவைகளை சுடுவதற்கான பால்ரஸ் ரவை நிரப்பப்பட்டு இருந்தது. அந்த ரவை துளைத்ததில் நாகப்பன் காயம் அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அக்கம்பக்கத்தினர் திரண்டனர்.

உடனே ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயம் அடைந்த நாகப்பனை குடும்பத்தினர் மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து நாகப்பன் குன்றக்குடி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமச்சந்திரனை தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்