மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் வெந்நீரை ஊற்றி கொலை

மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் வெந்நீரை ஊற்றி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாமியாரும், மனைவியும் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-16 20:59 GMT

திருச்சி,

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபருக்கும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதியுடன் வாலிபரின் மாமியாரும் வசித்து வந்தார். இந்த நிலையில் அந்த வாலிபருக்கு மது பழக்கம் இருந்து வந்தது. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மாமியாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

வெந்நீர் ஊற்றி கொலை

மருமகனின் கொடுமையை தாங்காமல் மாமியார் தனது மகளிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கணவரை கண்டித்துள்ளார். ஆனாலும் அந்த வாலிபர் மது குடித்து விட்டு வந்து மாமியாருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் மனம் வெறுத்த மாமியாரும், மனைவியும் வாலிபரை கொலை செய்ய முடிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அந்த வாலிபர் மாமியாருக்கு மீண்டும் பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

இதில் ஆத்திரம் அடைந்த தாயும், மகளும் கொதிக்கும் வெந்நீரில் மிளகாய்பொடி கலந்து வாலிபர் மீது ஊற்றினர். இதில் அவரது உடல் வெந்தது. வலியால் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார்.

மாமியார், மனைவி கைது

இதுகுறித்த புகாரின்பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் மீது வெந்நீரை ஊற்றி கொன்ற மாமியாரையும், மனைவியையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்