குடும்ப தகராறில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
பொன்னமராவதி அருகே குடும்ப தகராறில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே கருமங்காடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் அழகப்பன் (வயது 25). இவரது மனைவி நிரோஷா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். அழகப்பன் ஈரோட்டில் பாரில் வேலை பார்த்து வந்தார். மேலும் கடந்த 1 மாத காலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் மனைவி நிரோஷா ஆலவயல் பகுதியில் களையெடுக்கும் வேலைக்கு சென்றுள்ளார். நிரோஷாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று அழகப்பன் கூறியும் அதையும் மீறி நிரோஷா வேலைக்கு சென்றுள்ளார்.
இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அழகப்பன் சம்பவத்தன்று மதுபோதையில், வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீக்காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகப்பன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.