இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

திருமணம் செய்வதாக ஏமாற்றி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-12-23 19:17 GMT

திருமணம் செய்ய மறுப்பு

இலுப்பூரை சேர்ந்தவர் ஜனா என்கிற ஜானகிராமன் (வயது 25). கூலித்தொழிலாளியான இவர் 21 வயது இளம்பெண்ணுடன் நட்புடன் பழகி வந்தார். பின்னர் அந்த பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி பலாத்காரம் செய்தார். இதில் அந்த பெண் கர்ப்பமானார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஜானகிராமனிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த இளம்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் தன்னை திருமணம் செய்ய அந்த இளம்பெண், ஜானகிராமனிடம் மீண்டும் கேட்ட போது அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த இளம்பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானகிராமனை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் ஜானகிராமனுக்கு தகாத வார்த்தைகளால் திட்டிய பிரிவில் 3 மாதம் சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், திருமணம் செய்யாமல் மோசடி செய்ததற்கு ஓராண்டு சிறையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், பாலியல் வன்கொடுமைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

மேலும் அபராத தொகையை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நிவாரணமாக வழங்க தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து ஜானகிராமனை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்