ரெயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

காட்பாடி அருகே கத்தி முனையில் பெண்ணிடம் செல்போனை பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளிய வழக்கில் கைதான வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

Update: 2022-12-26 17:23 GMT

ஓடும் ரெயில் இருந்து கீழே தள்ளப்பட்ட பெண்

சென்னையை சேர்ந்தவர் பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த மாதம் 22-ந் தேதி சத்துவாச்சாரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு திருமண பத்திரிகை கொடுப்பதற்காக சென்னையில் இருந்து மின்சார ரெயிலில் வந்தார். காட்பாடியில் ரெயில் பெட்டியில் ஏறிய வாலிபர் பெண்ணிடம் செல்போனை கொடு பேசிவிட்டு தருகிறேன் எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் மறுத்தார். கத்தி முனையில் அவரிடமிருந்து செல்போனை வாலிபர் பறித்தார். அந்தப் பெண் கூச்சல் போடவே அவர் அணிந்திருந்த துப்பட்டாவை இழுத்து அவரை ரெயிலில் இருந்து கீழே தள்ளினார்

.அதனை பார்த்த பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

வாலிபர் கைது

இந்த சம்பவம் குறித்து அந்த பெண் காட்பாடி ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ரெயிலில் பயணம் செய்த அந்த வாலிபர் குடியாத்தம் கீழ் ஆலத்தூர் சின்னநாகல் கிராமத்தை சேர்ந்த ஹேமராஜ் (வயது 24) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது

ஹேமராஜ் தற்போது வேலூர் மத்திய சிறையில் உள்ளார். அவரை குண்டத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு உமா வேலூர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் ஹேமராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அந்த உத்தரவின் நகல் வேலூர் மத்திய சிறையில் உள்ள ஹேமராஜிடம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்