போலீஸ் போல நடித்து வாகன சோதனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

சென்னையில் போலீஸ் போல நடித்து வாகன சோதனை நடத்தி வசூல்வேட்டையில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-24 22:32 GMT

சென்னை,

சென்னையில் போலீஸ் போல நடித்து ஒருவர் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வசூல்வேட்டையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன. 2 பேர்களிடம் தலா ரூ.10 ஆயிரம் வீதம் வசூல் செய்ததாக, அவர் மீது நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவரை தேடி வந்தனர். நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் ஒரு வழக்கு பதிவானது.

கடந்த 1 வருடமாக அவரை போலீசார் தேடி வந்தனர். அவர் போலீஸ் சீருடையில், போலீஸ் என்று எழுதப்பட்ட மோட்டார் சைக்கிளில் பந்தாவாக வலம் வந்தார். அவர் ஹெல்ெமட் அணிந்து செல்வார். இதனால் அவரை பிடிக்க முடியவில்லை.

சமீபத்தில் சென்னை எழும்பூரில் இவர் வாகன சோதனையில் ஈடுபட்டார். தவறான வழியில் மோட்டார் சைக்கிளில் வந்ததோடு, பொது இடத்தில் சிகரெட் பிடித்ததாக தனியார் நிறுவன ஊழியர் கேசவன் என்பவரை மிரட்டி, ரூ.25 ஆயிரம் வசூல் செய்தார். கேசவன் இதுகுறித்து எழும்பூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இசக்கிபாண்டியன் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்.

பிடிபட்டார்-கைது

கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவான அவரது உருவம் மற்றும் மோட்டார் சைக்கிள் பதிவு எண் மூலம் இவரை கண்காணித்தனர். இன்ஸ்பெக்டர் இசக்கிபாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீசாரிடம் போலி போலீஸ்காரர் நேற்று முன்தினம் சிக்கினார்.

அவரது பெயர் டோன்ஸ்டூவர்ட் (வயது 32). டி.பி.சத்திரத்தைச் சேர்ந்தவர். அவரிடம் இருந்து போலியான போலீஸ் சீருடை, மோட்டார் சைக்கிள் மற்றும் வசூல் பணம் ரூ.44 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். போலீஸ் சீருடை அணிந்து தைரியமாக வாகன சோதனை நடத்தி, வசூல் வேட்டையில் ஈடுபட்டது பற்றி அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

நான் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளேன். ஊர்க்காவல் படை வீரராக, டி.பி.சத்திரம், தலைமைச்செயலக காலனி, கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்துள்ளேன். நான் நன்றாக கார் ஓட்டுவேன். ஒரு உதவி கமிஷனர், பெண் இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் டிரைவராக பணி புரிந்துள்ளேன். போலீஸ் ரோந்து வாகனமும் ஓட்டி உள்ளேன்.

போலீசாரோடு சேர்ந்து நானும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளேன். இதனால் எனக்கு தைரியம் ஏற்பட்டு, வாகன சோதனை நடத்தி வசூல்வேட்டையில் ஈடுபட்டேன். 10 பேரிடம் இதுபோல் பணம் வசூலித்துள்ளேன். ஆனால் 4 பேர் மட்டும் புகார் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்