காதல் திருமணம் செய்த வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை
சாத்தான்குளம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் காதல் திருமணம் செய்த வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொத்தனார்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கீழ தெருவைச் சேர்ந்தவர் துரைமுருகன். இவருடைய மகன் ஜெயசூர்யா (வயது 25), கொத்தனாரான இவர் காதல் திருமணம் செய்துள்ளார். பின்னர் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி பிரிந்து சென்றதால் ஜெயசூர்யா தனியாக வசித்து வந்தார்.
நேற்று இரவில் ஜெயசூர்யா தனது வீட்டில் அரிவாள் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.
சாவு
இதற்கிடையே, ஜெயசூர்யாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர் நீண்ட நேரமாக அவர் செல்போனை எடுக்காததால், அவரைத் தேடி வீட்டுக்கு சென்றார். அங்கு ரத்த வெள்ளத்தில் ஜெயசூர்யா உயிருக்கு போராடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜெயசூர்யாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் சிறிதுநேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
மர்மநபருக்கு வலைவீச்சு
இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், ஜெயசூர்யா வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்மநபர் திடீரென்று அரிவாளுடன் சென்று அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.
எனவே, ஜெயசூர்யாவை கொலை செய்த நபர் யார்? எதற்காக கொலை செய்தார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான கொலையாளியை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
சாத்தான்குளத்தில் காதல் திருமணம் செய்த வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.