பள்ளி மாணவிகளுக்கு ஆபாச சைகை காட்டிய வாலிபர்

பனப்பாக்கத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச சைகை காட்டிய வாலிபரை பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-13 18:25 GMT

ஆபாச சைகை

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் ரெட்டிவலம், பிள்ளைப்பாக்கம், பொய்கைநல்லூர், ஜாகீர் தண்டலம், துறையூர் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்றுவருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் மாணவிகள் பள்ளி முடிந்து பஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது மாணவிகளை நோக்கி வாலிபர் ஒருவர் ஆபாச சைகை காட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியிலிருந்த பொதுமக்களிடம் மாணவிகள் கூறினர்.

கட்டிவைத்தனர்

உடனே பொதுமக்கள் அங்கு சென்று ஆபாச சைகை காட்டிய வாலிபரை பிடித்து மின்கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இதுக்குறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் வாலிபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில் அந்த வாலிபர் பனப்பாக்கத்தை அடுத்த மேலபுலம் கிராமத்தில் வசிக்கும் குமார் என்பவரின் மகன் சந்தோஷ் (வயது 20) என்பதும், டிப்ளமோ படித்துவிட்டு சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருவதும் தெரிந்தது.

அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்