நண்பரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த வாலிபர் கைது

நண்பரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த வாலிபர் கைது

Update: 2022-12-11 19:59 GMT

கல்லணை அருகே முன்விரோதம் காரணமாக நண்பரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த வாலிபரை 6 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

ஆண்பிணம்

தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே உள்ள உய்யக்குண்டான் வடிகால் வாய்க்காலில் கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தோகூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கல்லணை பூங்காவில் மோட்டார் சைக்கிள் ஒன்று அனாதையாக கிடந்தது. இதனை பறிமுதல் செய்து, அதில் இருந்த செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

திருச்சியை சேர்ந்தவர்

விசாரணையில் பிணமாக கிடந்தவர் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் திண்ணியம் கீழ அன்பில் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (வயது25) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து தோகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அய்யாபிள்ளை ஆகியோர், ‌இறந்து கிடந்தவரின் செல்போனுக்கு கடைசியாக தொடர்பு கொண்ட திருச்சி அருகே பிச்சாண்டார் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த ஆகாஷ் (22) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

வாய்க்காலில் மூழ்கடித்து கொலை

விசாரணையில் முன்விரோதம் காரணமாக ஆகாஷ், பாஸ்கரனை கல்லணைக்கு அழைத்து வந்து அங்காள பரமேஸ்வரி கோவில் அருகில் மதுஅருந்திவிட்டு அங்குள்ள வாய்க்காலில் பாஸ்கரனை மூழ்கடித்து கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.

ஆகாஷ் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி ஆகாசை கைது செய்து திருவையாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

சந்தேக மரண வழக்கில் 6 மாதங்களுக்கு பிறகு திடீர் திருப்பம் ஏற்பட்டு, அந்த வழக்கு கொலை வழக்கமாக மாற்றப்பட்டதும், இதில் வாலிபர் கைது செய்யப்பட்டு இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்