திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை குளத்தில் அமுக்கி கொன்ற வாலிபர் கைது

திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை குளத்தில் அமுக்கி கொன்ற வாலிபர் கைது

Update: 2022-12-22 19:46 GMT

திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை தனது அண்ணன் மற்றும் நண்பருடன் சேர்ந்து குளத்தில் அமுக்கி வாலிபர் கொலை செய்தார். இதனையடுத்து வாலிபரையும், அவரது அண்ணனையும் போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை அருகே நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

இளம்பெண் மாயம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள வாத்தியனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் உடையார். விவசாய தொழிலாளியான இவரது மகள் வாசுகி(வயது 25). 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள வாசுகி கடந்த ஆகஸ்டு மாதம் அதிகாலை முதல் வீட்டில் இருந்து திடீரென்று மாயமானார்.

இது குறித்து வாசுகியின் தந்தை உடையார், கீழத்தூவல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வாசுகியை தேடி வந்தார்.

செல்போன் மூலம் விசாரணை

வாசுகி பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வாசுகியின் ஊரை சேர்ந்த ராமு என்பவரின் மகன் மாதவன்(25) என்பவர் அடிக்கடி வாசுகிக்கு போன் செய்தது தெரிய வந்தது.

இதனால் மாதவன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் மாதவனை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைத்துள்ளனர். அதன்படி 2 முறை கீழத்தூவல் போலீஸ் நிலையத்திற்கு மாதவன் விசாரணைக்கு வந்துள்ளார்.

போலீசாருக்கு சந்தேகம்

அப்போது மாதவன், தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டியில் தனது அண்ணன் திருக்கண்ணனுடன் சேர்ந்து வயல்களில் ஆட்டுக்கிடை போட்டுள்ளதாகவும், வாசுகியிடம் தான் பேசியது உண்மைதான் என்றும் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் வாசுகி மாயமானது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் போலீசாரிடம் மாதவன் கூறியுள்ளார். ஆனாலும் அவர் மீது போலீசாருக்கு தொடர்ந்து சந்தேகம் இருந்து வந்தது.

மாயமான பெண்ணின் சிம்கார்டு

இந்த நிலையில் மாதவன் புது செல்போன் ஒன்றை வாங்கி உபயோகப்படுத்தி வந்துள்ளார். அதே செல்போனில் வாசுகி பயன்படுத்தி வந்த சிம்கார்டை போட்டு உள்ளார்.

இதை கண்டுபிடித்த கீழத்தூவல் போலீசார், மாதவன் மற்றும் அவருடைய அண்ணன் திருக்கண்ணன் ஆகிய இருவரையும் மீண்டும் கீழத்தூவல் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைத்து உள்ளனர்.

திடுக்கிடும் தகவல்கள்

அப்போது வாசுகி பயன்படுத்தி வந்த சிம்கார்டு மாதவனுக்கு எப்படி கிடைத்தது என போலீசார் கேட்டனர். அப்போதுதான், தான் வசமாக சிக்கிக்கொண்டதை மாதவன் உணர்ந்தார்.

இதனைத்தொடர்ந்து மாதவனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

காதல்

மாதவனுக்கும், வாசுகிக்கும் ஒரே ஊர் என்பதால் இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்த நிலையில் தனக்கு சொந்தமான ஆடுகளை கிடை போடும் பணிக்காக மாதவன் தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி பகுதிக்கு வந்துள்ளார். இதனால் செங்கிப்பட்டி பகுதியிலேயே மாதவன் தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நெருக்கம்-கர்ப்பம்

அவ்வப்போது மாதவன் தனது சொந்த ஊருக்கு சென்று வந்துள்ளார். அவ்வாறு ஊருக்கு போகும்போதெல்லாம் வாசுகியை சந்தித்து மாதவன் பேசி வந்ததும், அப்போது இருவரும் நெருக்கமாக இருப்பதும் வழக்கமாக இருந்துள்ளது.

இதனால் வாசுகி கர்ப்பம் அடைந்துள்ளார். இதற்கிடையில் கடந்த ஆகஸ்டு மாதம் ஊரில் இருந்து செங்கிப்பட்டி பகுதிக்கு மாதவன் திரும்பி வந்து விட்டார்.

திருமணத்துக்கு வற்புறுத்தல்

தான் கர்ப்பம் அடைந்த விசயத்தை தனது குடும்பத்தினர் கண்டுபிடித்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்த வாசுகி, மாதவனை தொடர்பு கொண்டு தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு மாதவன் முறையாக பதில் அளிக்காமல் சாக்கு போக்கு சொல்லி வந்துள்ளார்.

இந்த நிலையில் செங்கிப்பட்டியில் மாதவனுடன் தங்கி இருந்த அவரது அண்ணன் திருக்கண்ணன் இந்த விசயம் அறிந்து மாதவனை கண்டித்துள்ளார். இதனால் மாதவன் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி விஷம் குடித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கொலை செய்ய திட்டம்

ஆஸ்பத்திரியில் வைத்து மாதவன் தனது அண்ணன் திருக்கண்ணன் மற்றும் நண்பர் ஒருவருடன் சேர்ந்து வாசுகியை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார். இதனையடுத்து வாசுகியை செங்கிப்பட்டிக்கு வருமாறு மாதவன் அழைத்துள்ளார்.

காதலன் அழைத்தவுடன் வாசுகி கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி ஊரில் இருந்து செங்கிப்பட்டிக்கு வந்துள்ளார். அங்கு வந்த வாசுகி, மாதவனிடம் தான் கர்ப்பமாக இருப்பதால் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் வற்புறுத்தி உள்ளார்.

ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு...

வாசுகியை சமாதானம் செய்வது போல் மாதவன், அவருடைய அண்ணன் திருக்கண்ணன் மற்றும் மாதவனின் நண்பர் ஆகிய 3 பேரும் நடித்து உள்ளனர். மாதவனின் நண்பர், வாடகை வீட்டில் தங்க வைப்பதாக கூறி செங்கிப்பட்டி டி.பி. சானிடோரியத்தில் இருந்து அயோத்திப்பட்டிக்கு செல்லும் கட் ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வாசுகியை தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.

இவர்களை பின் தொடர்ந்து மாதவனும், அவருடைய அண்ணன் திருக்கண்ணனும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

குளத்தில் அமுக்கி கொலை

பின்னர் அங்குள்ள குளம் ஒன்றில் வாசுகியை, மாதவன் தனது அண்ணன் திருக்கண்ணன் மற்றும் நண்பருடன் சேர்ந்து தண்ணீரில் அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் வாசுகி உடலின் மீது பெரிய கல்லை வைத்து விட்டு வந்துள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து கீழத்தூவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி, சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி மற்றும் போலீசார் மாதவன் மற்றும் அவரது அண்ணன் திருக்கண்ணன் ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு நேற்று செங்கிப்பட்டி வந்தனர்.

மண்டை ஓடு-எலும்புகள் மீட்பு

திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், பூதலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், செங்கிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் கீழத்தூவல் போலீசார் வாசுகி கொலை செய்யப்பட்ட குளத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அந்த குளத்தில் இறங்கி தேடினர்.

அப்போது குளத்தில் இருந்து கொலை செய்யப்பட்ட வாசுகியின் மண்டை ஓடு, எலும்புகள் கிடைத்தன. அவற்றை போலீசார் மீட்டனர். சம்பவம் நடந்து 3 மாதங்களுக்கும் மேல் ஆனதால் குளக்கரை பகுதியில் எலும்புகள் சிதறி கிடந்தன.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதாலும், சுற்றிலும் கருவை முள் காடுகள் இருப்பதாலும் நாய், நரி ஆகியவை குளத்தில் மிதந்த வாசுகியின் சடலத்தை இழுத்து தின்று குதறி போட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

தடயவியல் நிபுணர்கள்

மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், வாசுகியின் மண்டை ஓடு, எலும்புகள், தலைமுடி, ஆடைகள் போன்றவற்றை சேகரித்தனர். கீழத்தூவல் போலீசார் மற்றும் செங்கிப்பட்டி போலீசார், வாசுகியின் மண்டை ஓடு மற்றும் எலும்புகளை சோதனை செய்வதற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மாதவன், திருக்கண்ணன் ஆகிய இருவரையும் கீழத்தூவல் போலீசார், ராமநாதபுரத்திற்கு வேனில் அழைத்து சென்றனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய மாதவனின் நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பரபரப்பு

திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை தனது அண்ணன், நண்பருடன் சேர்ந்து வாலிபர் குளத்தில் அமுக்கி கொலை செய்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்