ஆனைமலை
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் அஜீஸ்(வயது 28). இவர் ஆனைமலையை அடுத்த திவான்சாபுதூர் பகுதியில் தங்கியிருந்து, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் அஜீஸ், அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் பின்புறம் உள்ள கிணற்றில் அருகே நின்று செல்போனில் பேசி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் திடீரென கால் தவறி அவர் கிணற்றுக்குள் விழுந்ததாக தெரிகிறது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் ஆனைமலை போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், கிணற்றில் தேடுதல் வேட்டை நடத்தினர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அஜீஸ் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.