எலி பசை கலந்த நீரை குடித்த வாலிபர் பரிதாப சாவு
எலி பசை கலந்த நீரை குடித்த வாலிபர் பரிதாப இறந்தார்.
கல்லக்குடி:
எலித்தொல்லை
அரியலூர் மாவட்டம், வாரணாசி அருகே உள்ள மல்லூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவேல். இவரது மகன் சங்கர்(வயது 34). மணிவேல் திருச்சி மாவட்டம், கீழரசூர் கிராமத்தில் வீடு கட்டி, அங்கு குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். அவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் மணிவேல் தனது மகனுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் சங்கர் தனது வீட்டில் எலித்தொல்லை அதிகமாக உள்ளதால், எலி பசை(விஷம்) வாங்கி வந்து, ஒரு டம்ளரில் எலி பசையை கலந்தும், மற்றொரு டம்ளரில் நல்ல தண்ணீரும் வைத்துள்ளார். அதனை இரவில் தெளிப்பதற்காக வைத்துவிட்டு தூங்கிவிட்டார்.
சிகிச்சை
பின்னர் நள்ளிரவில் கண் விழித்த சங்கர் இயற்கை உபாதை கழித்துவிட்டு, வீட்டிற்குள் வந்துள்ளார். அப்போது செல்போனை பார்த்தபடியே எலி பசை கலந்து நீரை, நல்ல தண்ணீர் என நினைத்து குடித்துவிட்டார். சிறிது நேரத்தில் தொண்டை வறண்ட நிலையில், எலி பசை கலந்த நீரை குடித்தது அவருக்கு தெரியவந்தது.
உடனடியாக அவர் தனது தந்தை மணிவேலுடன் சென்று, அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். இதையடுத்து அவர் 3 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பி விட்டார்.
சாவு
இதைத்தொடர்ந்து கடந்த 22-ந் தேதி உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் சங்கர் தஞ்சாவூரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கல்லக்குடி போலீஸ் நிலையத்தில் மணிவேல் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.