காதலியை உயிரோடு எரித்துக் கொன்ற வாலிபர்

திடீரென உறவை முறித்துக்கொண்டதால் கள்ளக்காதலியை வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை செய்தார்.

Update: 2023-08-24 23:45 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி என்பவரது மகன் முருகன். இவருடைய மனைவி விசாலாட்சி(வயது 38). இவருக்கும் மேட்டுத்தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் முருகன்(29) என்பவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்துள்ளது. இந்நிலையில் விசாலாட்சி சமீபத்தில் ஏ.முருகனுடனான உறவை திடீரென முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதை, ஏ.முருகனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார்

கடந்த 19-ந்தேதி இரவு அவர், விசாலாட்சியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நகர் கிராமம் ஆலமரம் அருகே குப்பை கொட்டும் இடத்திற்கு வரும்படி கூறி மிரட்டி உள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த விசாலாட்சி, வேறு வழியின்றி கையில் மண்எண்ணெய் கேனுடன் சென்றார்.

அங்கு விசாலாட்சி, ஏ.முருகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அவரை ஏ.முருகன் திட்டி தாக்கினார். மேலும் விசாலாட்சி கையில் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து அவர் மீது ஊற்றி ஏ.முருகன் தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சாவு

இதில் விசாலாட்சி வலியால் அலறி துடித்தபடி ஊருக்குள் ஓடி வந்தார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, அவர் மீது பற்றி எரிந்த தீயை பொதுமக்கள் அணைத்து, அவரை சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

இது குறித்து விசாலாட்சி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரம்மதேசம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, ஏ.முருகனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்