நடுரோட்டில் இறக்கி விட்டதால் பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்த வாலிபர் கைது

திட்டக்குடி அருகே டிக்கெட் எடுக்க மறுத்து கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபரை நடுரோட்டில் இறக்கி விட்டதால் கல்வீசி பஸ் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-12-20 19:37 GMT

ராமநத்தம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு கடலூர் மாவட்டம் திட்டக்குடி நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது கண்டக்டர் விஸ்வநாதன், பயணிகளிடம் டிக்கெட்டுக்கான கட்டணத்தை வசூலித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் திட்டக்குடி அருகே பெருமுளை என்ற இடத்தில் பஸ் வந்த போது, வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறினார். இதை பார்த்த விஸ்வநாதன், அந்த வாலிபரை டிக்கெட் எடுக்குமாறு கூறினார். அதற்கு அந்த வாலிபர் டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறி விஸ்வநாதனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் பஸ் பெருமுளை சாலையில் திருவள்ளுவர் கலைக்கல்லூரி அருகில் சென்ற போது, விஸ்வநாதன் டிக்கெட் எடுக்க மறுத்த வாலிபரை பஸ்சில் இருந்து இறக்கி விட்டார். இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது கல்வீசினார். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

வாலிபர் கைது

இதுகுறித்து டிரைவர் வெங்கடேசன், திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பஸ் கண்ணாடியை உடைத்தது வதிஷ்டபுரத்தை சேர்ந்த பிரபாகரன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்