பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரால் பரபரப்பு
பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி தனியார் பஸ் ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. வம்பன் நான்குரோடு பகுதியில் வந்த போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பாச்சிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த வாலிபரான அகதீஸ் என்பவர் பஸ்சை முந்தி செல்ல முயன்றார். அவருக்கு அந்த தனியார் பஸ் டிரைவர் வழி கொடுக்க வில்லை. இதையடுத்து அந்த பஸ்சை அகதீஸ் வழிமறித்து டிரைவருடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதைதொடர்ந்து ஆலங்குடி அரசமரம் பஸ் நிறுத்தத்தில் வைத்து மீண்டும் அந்த பஸ்சை அகதீஸ் மறித்து, தான் கையில் வைத்திருந்த கரும்பை கொண்டு டிரைவரை மிரட்டியுள்ளார். பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் அனுப்பி வைத்தனர். இதையடுத்து அகதீஸ் தனது நண்பர்கள் 4 பேரை அழைத்துக் கொண்டு கல்லாலங்குடி பகுதியில் சென்ற பஸ்சை மறித்து கரும்பால் பஸ் ஜன்னல் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் பஸ்சில் பயணம் செய்த 2 பெண் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அகதீசை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அகதீஸ் நண்பர்கள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.