குடிபோதையில் நண்பரை அடித்துக்கொன்று ஏரியில் புதைத்த வாலிபர்

விக்கிரவாண்டி அருகே குடி போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரைஅடித்துக்கொன்று ஏரியில் புதைத்த வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-12-17 18:45 GMT

விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் கவியரசன்(வயது 26). இவர் கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதி மாயமானார்.

இது பற்றி அவரது தந்தை கொடுத்த புகாரின் போில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கவியரசன் கடைசியாக ஆவுடையார்பட்டு கிராமத்தை சேர்ந்த அவரது நண்பர் ராம்குமார்(20) என்பவருடன் சென்றது தெரியவந்தது.

அடித்துக்கொலை

இதையடுத்து போலீசார் ராம்குமாரை பிடித்து விசாரணை செய்தபோது, ஆவுடையார்பட்டு ஏரியில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கவியரசனை அடித்துக்கொன்று உடலை ஏரியில் புதைத்தது தெரியவந்தது.

இதையடுத்து கவியரசனின் உடலை மீட்பதற்காக விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார், ராம்குமாரை அழைத்துக்கொண்டு நேற்று காலை ஆவுடையார்பட்டு ஏரிக்கு வந்தனர். அப்போது ஏரியின் மையப்பகுதியில் உள்ள முட்புதர் அருகில் கவியரசனின் உடலை புதைத்த இடத்தை ராம்குமார் அடையாளம் காட்டினாா்.

உடலை தேடும் பணி

ஏரியில் தண்ணீர் உள்ளதால் விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களில் நீச்சல் தெரிந்த தீயணைப்பு வீரர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் ஏரிக்குள் இறங்கி ராம்குமார் அடையாளம் காட்டிய இடத்தில் கவியரசனின் உடலை தேடினர்.

தற்போது தண்ணீர் அதிகளவில் இருப்பதால் கவியரசனின் உடல் புதைக்கப்பட்டுள்ள இடத்தை கண்டுபிடித்து, உடலை தோண்டி எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது ராம்குமார் குறிப்பிட்டு சொல்லும் இடத்தை கண்டறிந்த பின்னர், உடலை தோண்டுவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு்ம் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை அடித்து கொன்று ஏரியில் புதைத்த சம்பவம் விக்கிரவாண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்