கொடுக்கல் வாங்கல் தகராறில் தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை
ஒடுகத்தூர் அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் தலையில் கல்லைபோட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ஒடுகத்தூர் அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் தலையில் கல்லைபோட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கொடுக்கல் வாங்கல் தகராறு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த பின்னத்துறை சின்னபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மகன் முரளி (வயது 27). அதே ஊரைச் சேர்ந்தவர் வேலு (48). இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். வேலுவிடமிருந்து குடும்பச் செலவுக்காக முரளி ரூ.40 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். அந்த பணத்தை திருப்பித் தருமாறு முரளியிடம் பலமுறை வேலு கேட்டுள்ளார்.
அதற்கு முரளி பணத்தை தராமல் காலம்கடத்தி வந்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தலையில் கல்லை போட்டு கொலை
இதில் ஆத்திரமடைந்த வேலு பெரிய கல்லை எடுத்து முரளியின் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து முரளியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து வேலுவை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.