தூத்துக்குடியில் வாலிபரை அரிவாளால் வெட்டிசெல்போன் பறிப்பு; 4 பேர் சிக்கினர்
தூத்துக்குடியில் வாலிபரை அரிவாளால் வெட்டி செல்போன் பறித்து சென்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் வாலிபரை அரிவாளால் வெட்டி மிரட்டிவிட்டு செல்போனை பறித்து சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் பறிப்பு
தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணா காலனியை சேர்ந்தவர் லாம்பர்ட். இவருடைய மகன் எபனேசர் (வயது 26). இவர் சம்பவத்தன்று தூத்துக்குடி-எட்டயபுரம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், அவரை வழிமறித்து நிறுத்தினர். திடீரென்று அவரை அரிவாளால் வெட்டி மிரட்டி விட்டு செல்போனை பறித்து சென்றனர். இதில் காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
மேலும் இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், தூத்துக்குடி வடக்கு சங்கரப்பேரியை சேர்ந்த கோட்டை கருப்பசாமி மகன் அஜித்குமார் (23), செந்தூர்பாண்டி மகன் ஈசுவரன் (42), தூத்துக்குடி ஜி.பி காலனியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மகேஷ் குமார் (24), தூத்துக்குடி குறிஞ்சி நகரை சேர்ந்த மாரீசன் மகன் அருண்குமார் (25) ஆகிய 4 பேரும் சேர்ந்து எபனேசரை அரிவாளால் வெட்டி செல்போனை பறித்துச் சென்றது தெரியவந்தது.
4 பேர் கைது
இதை தொடர்ந்து போலீசார் உடனடியாக அஜித்குமார், மகேஷ்குமார், ஈசுவரன், அருண்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மீட்டனர். மேலும், அவர்கள் வேறு யாரிடமும் வழிப்பறி செய்துள்ளனரா? என போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.