கல்லா பெட்டியை கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் கல்லா பெட்டியை கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-05 18:41 GMT

பெரம்பலூர் பாலக்கரையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் பிரபல நிறுவனத்தில் கடந்த மாதம் 26-ந்தேதி ரூ.3 லட்சத்து 36 ஆயிரத்து 336 இருந்த கல்லா பெட்டியை 2 முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்றனர். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்தது. அதனை வைத்து அவர்களை பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை தாலுகா, எஸ்.மலையனூரை சேர்ந்த கோவிந்தன் மகன் ஆறுமுகம் (வயது 28), அவருடைய அண்ணன் மணிகண்டன் (33) என்பது தெரியவந்தது. இதில் ஆறுமுகம் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கொள்ளை வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் மணிகண்டனை பெரம்பலூர் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் 2 பேரும் கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரித்து விட்டு கல்லா பெட்டியை பெரம்பலூர் கோர்ட்டுக்கு பின்புறம் உள்ள அரசுக்கு சொந்தமான பாழடைந்த கிணற்றில் போட்டு விட்டு சென்றது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். கிணற்றில் இருந்து கல்லா பெட்டியை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மணிகண்டனிடம் இருந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்