பேரம்பாக்கத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
பேரம்பாக்கத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டவுடன் தான் வைத்திருந்த பையுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.
அதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்த பையை திறந்து பார்த்தபோது அதில் 1,200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை அவர் அந்த பகுதியில் விற்பனைக்கு கொண்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேற்கண்ட கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்ததாக பேரம்பாக்கம் அருகே உள்ள குமாரச்சேரி கிராமத்தை சேர்ந்த ராஜா என்கின்ற பாட்ஷா (வயது 26) என்பவரை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.