கும்மிடிப்பூண்டி அருகே மரத்தில் பிணமாக தொங்கிய வாலிபர்; கொலையா? போலீசார் விசாரணை

கும்மிடிப்பூண்டி அருகே மரத்தில் சென்னையை சேர்ந்தவர் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-03-24 11:40 GMT

மர்ம சாவு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தாசில்தார் அலுவலகம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கருவேல மரத்தில் நேற்று சுமார் 35 மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவரது ஆடைகள் கலையப்பட்ட நிலையில், கைலியில் தூக்கில் தொங்கியவாறு தரையோடு தரையாக கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் தொங்கியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

மேலும் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சந்தேக சாவாக வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என நடத்திய விசாரணையில் சென்னை மணலி புதுநகரை அடுத்த கடப்பாக்கம் கிராமத்தைச்சேர்ந்த நாகராஜ் என்பது தெரியவந்தது. திருமணமாகி 2 மகள்கள் உள்ள நிலையில், அவர் எதற்காக கும்மிடிப்பூண்டி வந்தார்? ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அவர் வர வேண்டிய அவசியம் என்ன? அவரை யாரேனும் கொன்று தூக்கில் தொங்கவிட்டனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்