அரசு பஸ்சில் டிக்கெட் எடுக்காமல் தகராறில் ஈடுபட்ட வாலிபர்

விருத்தாசலம் அருகே அரசு பஸ்சில் டிக்கெட் எடுக்காமல் தகராறில் ஈடுபட்ட வாலிபர், குளத்தில் குதித்து தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-29 18:45 GMT

விருத்தாசலம்:

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அரியலூர் மாவட்டம் இடையக்குறிச்சிக்கு புறப்பட்டது. கருவேப்பிலங்குறிச்சி அருகே சென்றபோது பஸ்சில் பயணம் செய்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரிடம் கண்டக்டர் டிக்கெட் கேட்டார். ஆனால் அந்த வாலிபரோ டிக்கெட் எடுக்காமல் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையம் அருகில் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதையடுத்து கண்டக்டரும், டிரைவரும் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.

குளத்தில் குதித்த வாலிபர்

இதனால் அச்சமடைந்த வாலிபர், திடீரென பஸ்சில் இருந்து இறங்கி அருகில் இருந்த குளத்தில் குதித்தார். இதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள், போலீசாருடன் சேர்ந்து குளத்து பகுதியில் தேடியும், அவர் கிடைக்கவில்லை. குளத்தில் குதித்த வாலிபர், தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாமோ என்று போலீசார் அச்சமடைந்தனர். இதையடுத்து விருத்தாசலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் குளத்தில் இறங்கி தேடிப்பார்த்தனர். ஆனால் வாலிபர் கிடைக்கவில்லை. இரவு நேரம் என்பதால் தேடும் பணியும் நிறுத்தப்பட்டது.

பரபரப்பு

இந்த நிலையில் நேற்று காலையில் அந்த குளக்கரையில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார். இது பற்றி அப்பகுதியினர் தெரிவித்ததன்பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விரைந்து வந்து வாலிபரை பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர், அங்குள்ள விவசாய நிலத்தில் இறங்கி தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் அழகாபுரம் கிராமத்தை சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்