சூதாட்ட கிளப்பில் வாலிபர் மர்மச்சாவு
சாத்தனூரில் சூதாட்ட கிளப்பில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். சூதாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தனூரில் சூதாட்ட கிளப்பில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். சூதாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூதாட்ட கிளப்
தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் பகுதியில் வெகு நாட்களாக சட்டத்திற்கு விரோதமான சீட்டாட்ட கிளப் இயங்கி வந்துள்ளது. சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பலமுறை இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். இதனால் சூதாட்ட காரர்கள் அடிக்கடி இடத்தை மாற்றி கிளப் நடத்தி சூதாடி வந்துள்ளனர்.
சாத்தனூரில் உள்ள ஒரு கட்டிடத்தில் சூதாட்ட கிளம் நடைபெற்று வந்துள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து பணம் வைத்து சீட்டு விளையாடி உள்ளனர். இதில் முத்தனூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 35) என்பவரும் விளையாடியதாக கூறப்படுகிறது.
வாலிபர் மர்மச்சாவு
அங்கு வெங்கடேஷ் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதனை அடுத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவரும் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சாத்தனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அங்கு வெங்கடேஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சீட்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் வெங்கடேஷ் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.