வேகத்தடை மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
கந்திலி அருகே திடீரென அமைக்கப்பட்ட வேகத்தடை மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் தூக்கி வீசப்பட்டு பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாலிபர் பலி
கந்திலி ஒன்றியம் குனிச்சி அருகே லக்கிநாயக்கன்பட்டி கூட்ரோட்டில் தரைப்பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனையொட்டி நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் ஒரு வழி பாதையாக மாற்ற மண் கொட்டி வேகத்தடை ஏற்படுத்தியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு மேற்குபதனவாடி கிராமத்தைச் சேர்ந்த மினி லாரி டிரைவர் சூர்யா (வயது 22) என்பவர் மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது லக்கிநாயக்கன்பட்டி கூட்ரோட்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையை கவனிக்காமல் வேகமாக வந்த போது தூக்கி வீசப்பட்டு மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சாலை மறியல்
இது குறித்து அவரது தாயார் சிவகாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் பக்கத்து வீட்டை சேர்ந்த கோபி என்பவருடன் மோட்டார் சைக்கிள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, அதே தற்காலிக வேகத்தடை மீது மோதியதில் சிவகாமி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து கை, கால்கள் மற்றும் தலையில் அடிப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் அங்கிருந்து தர்மபுரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திருப்பத்தூர்- தருமபுரி ரோட்டில் சாலை மறியல் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்பட்டு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.