டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது பார்த்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
நல்லம்பள்ளி அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது பார்த்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தார்.
நல்லம்பள்ளி
பழுது நீக்கும் பணி
தர்மபுரி மாவட்டம் பூசாரிபட்டியை சேர்ந்தவர் மாதப்பன். இவரது மகன் வையாபுரி (வயது 30). இவர் நல்லம்பள்ளி அருகே தடங்கம் கிராமத்தில் உள்ள, நகராட்சி குப்பை கிடங்கு முன்பு பழுதான டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்க மின்சார வாரிய ஊழியருடன் வந்தார். தொடர்ந்து வையாபுரி டிரான்ஸ்பார்மர் மீது ஏறி நேற்று பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, அவரை எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட வையாபுரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வையாபுரியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தா்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
இதுகுறித்து தகவல் அறிந்த வையாபுரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று உடலை பார்த்து கதறி அழுதனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று மின்வாரிய ஊழியரிடம் விசாரணை நடத்தினர். டிரான்ஸ்பாாமரில் ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்ட வாலிபர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.