லாரியின் அடியில் சிக்கி வாலிபர் சாவு

கிணத்துக்கடவு அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் வெடித்து லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-05 21:00 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் வெடித்து லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

டைல்ஸ் ஒட்டும் காண்டிராக்டர்

கோவை அருகே உள்ள வழுக்குப்பாறை கண்ணம்மநாயக்கனூர் அம்மன் வீதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் வேலையாட்களை வைத்து காண்டிராக்ட் முறையில் டைல்ஸ் ஓட்டும் பணி செய்து வருகிறார். இவருடைய மனைவி கலாமணி. இவர்களுக்கு சரவணன் (வயது 22) என்ற மகனும், ஸ்ரீமதி (23) என்ற மகளும் உள்ளனர்.

இதில் ஸ்ரீமதி திருமணம் முடிந்து தனது கணவருடன் வசித்து வருகிறார். சரவணன் தனது தந்தையுடன் டைல்ஸ் ஓட்டும் பணி நடைபெறும் இடங்களில் மேற்பார்வையிடும் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

வாலிபர் சாவு

இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் சரவணன், டைல்ஸ் ஓட்டும் தொழிலாளிகளுக்கு சம்பளம் வழங்குவதற்காக தனது வீட்டில் இருந்து சொக்கனூர் வழியாக கிணத்துக்கடவை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சிங்கையன்புதூர்-வடபுதூர் இடையே தனியார் டீத்தூள் கம்பெனி அருகே வந்தபோது, ஏதிரே வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளுடன் சரவணன் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டார். சுமார் அடி தூரத்திற்கு மோட்டார் சைக்கிளையும், சரவணணையும் லாரி இழுத்து சென்றது. லாரியின் அடியில் சிக்கிய சரவணன் உடல் நசுங்கி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

லாரியில் தீப்பிடித்தது

இதற்கிடையில் லாரியின் அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் உடைந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ லாரியின் முன்பகுதியில் மளமளவென பரவி பற்றி எரிந்தது. இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். லாரியும், மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்து எரிந்ததால் சொக்கனூர்-கிணத்துக்கடவு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அதிகாரி தங்கராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயிணை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், செந்தில்குமார் மற்றும் போலீசார் உயிரிழந்து கிடந்த சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

விபத்தின் காரணமாக சொக்கனூர்-கிணத்துக்கடவு இடை யே சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து போலீசார் கிரேனை வரவழைத்து விபத்தில் சிக்கிய லாரியையும், இருசக்கர வாகனத்தையும் சாலையில் இருந்து அகற்றினர். அதன் பின்னரே போக்குவரத்து தொடங்கியது.

இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய எட்டிமடை அருகே உள்ள புங்காகவுண்டன் புதூரை சேர்ந்த லாரி டிரைவர் பழனிசாமி என்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் கிணத்துக்கடவு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்