நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தப்பி வந்த வாலிபர் தற்கொலைக்கு முயன்றார். தலையால் கண்ணாடியை உடைத்து கையை கிழித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-21 18:45 GMT

இலங்கையைச் சேர்ந்தவர் ஜாய் (வயது 35). இவர் தனது 8 வயதில் இலங்கையில் நடந்த போர் காரணமாக தமிழகத்திற்கு அகதியாக வந்தார். ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் இருந்த அவர் 19 வயதில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களுக்கு சென்ற அவரை போலீசார் மீண்டும் கைது செய்து, மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்தனர். எனினும் அங்கிருந்து தப்பி அவர் தற்போது பல்வேறு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் ஜாய் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு ேநற்று மனு கொடுக்க வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீஹா, ஹரிஹரன் மற்றும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். ஜாய் கூறுகையில், 'இலங்கையில் உள்ள எனது பெற்றோரை சந்திப்பதற்காக என்னை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்க கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினேன். அப்போது என்னை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்கள். ஆனால், இதுதொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே, என்னை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வேண்டும். இல்லையெனில் எனக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். நான் கைதி போல் இங்கு வாழ்ந்து வருகிறேன். அடிக்கடி போலீசார் என்னை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்' என்றார்.

இதையடுத்து அவரை போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க செய்தனர். பின்னர் மனுவை வாங்கிய அதிகாரிகள், உங்களை காணவில்லை என்று மண்டபம் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. எனவே முதலில் உங்களை மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கிறோம். பின்னர் சென்னையில் உள்ள மறுவாழ்வு இயக்குனர் மூலம் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்வதாக கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து வெளியே வந்த ஜாய் திடீரென கலெக்டர் அலுவலகத்தில் நுழைவுவாயில் பகுதியில் உள்ள புறக்காவல் நிலைய கண்ணாடி ஜன்னலில் தலையால் முட்டினார். இதில் கண்ணாடி உடைந்து சிதறியது. அதில் ஒரு துண்டை எடுத்து கையை கிழித்துக் கொண்டு, கழுத்தை அறுக்க முயன்றார். பின்னர் தன்னைத்தானே குத்திக்கொண்டு தற்கொலை செய்வதாக கூறி சத்தம் போட்டார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சண்முகவேல் உள்ளிட்டவர்கள் ஜாயை மடக்கி பிடித்து கண்ணாடி துண்டை பறிமுதல் செய்தனர். அப்போது, கண்ணாடி துண்டை பிடுங்கும்போது போலீஸ்காரர் சண்முகவேலுக்கு காயம் ஏற்பட்டது. மற்றொரு போலீஸ்காரருக்கு லேசான கீறல் விழுந்தது.

பின்னர் ஜாயை ஜீப்பில் ஏற்றி பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் அறையின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது, போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்